அதிக மரவள்ளி விளைச்சலை முன்னிட்டு சின்னசேலத்தில் அரசு சேகோ தொழிற்சாலை: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகி அணை, மணிமுத்தாறு டேம் போன்ற அணைகள் உள்ளதால் இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் இங்கு நீர்வளம் உள்ள ஆறுகள் உள்ளதால் நெல், கரும்பு போன்ற நஞ்சை பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இதையடுத்து கரும்பு விவசாயிகளின் நலன் கருதி கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலைகளும், ஒரு தனியார் சர்க்கரை ஆலையும் இந்த மாவட்டத்தில் உள்ளது.

மேலும் கரும்புக்கு அடுத்தபடியாக சின்னசேலம், கல்வராயன்மலை போன்ற தாலுகாவில் மரவள்ளி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கல்வராயன் மலையில் மரவள்ளி பயிர் மட்டுமே சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல சின்னசேலம் பகுதியில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்கின்றனர். மரவள்ளியை பொருத்தவரை நீர்வளம் குறைந்து இருந்தாலும் சொட்டு நீர் பாசனத்திலும் பயிர் செய்து நல்ல லாபத்தை பெறலாம். இந்த மரவள்ளியில் இருந்து ஸ்டார்ச், சேமியா, ஜவ்வரிசி, மைதா, கால்நடை தீவனங்கள் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் இதனை உற்பத்தி செய்யும் சேகோ ஆலைகள் அனைத்தும் சேலம் மாவட்டத்தில்தான் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் ஆலைகளோ, அரசு ஆலையோ இல்லை. மேலும் கரும்பை போன்று அரசாங்கம் மரவள்ளி கிழங்கிற்கு ஆதார விலையை நிர்ணயிக்கப்படவில்லை. அதனால் மரவள்ளியை அறுவடை செய்து விற்கும் போது புரோக்கர்கள் அடிமாட்டு விலைக்கு கேட்கின்றனர். இதனால் லாபம் இல்லாவிட்டாலும் செலவுத்தொகை கிடைத்தாலே போதும் என்ற நிலை உள்ளது.

இதைவிட கல்வராயன்மலையில் சேலம் மாவட்ட புரோக்கர்கள் மிக குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேகோ தொழிற்சாலை இல்லாததால் மரவள்ளியை லாரியில் ஏற்றி சேலம் மாவட்டத்துக்கு எடுத்து செல்லும் போது போக்கு வரத்து செலவினமும் ஏற்படுகிறது. இத்தகைய செலவினங்களை தவிர்க்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலத்தில் அரசு சேகோ பேக்டரி தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: