மதுராந்தகம் ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில் இரவோடு இரவாக பள்ளி கட்டிடத்தை இடித்த மர்மநபர்கள்: ஊராட்சி தலைவர் போலீசில் புகார்

சென்னை: மதுராந்தகம் ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில் துவக்கப்பள்ளி பள்ளி கட்டிடத்தை இடித்த, மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மதுராந்தகம் ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இங்கு, 60 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் 1981ம் ஆண்டு கட்டப்பட்ட சீமை ஓடு பதிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் சிதிலமடைந்ததால் அதற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதனால், ஊராட்சி நிர்வாகம் பழைய கட்டிடத்தை இடிக்க தீர்மானம் இயற்றி உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தை மர்ம நபர்கள் இரவோடு இரவாக இடித்து அதிலுள்ள பொருட்களை டிராக்டரில் கொண்டு சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து, அங்கு நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் இடிக்கப்பட்ட கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர், பள்ளி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், மதுராந்தகம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் ஆகியோர் படாளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

 அந்த புகார் மனுவில், ‘தனது ஊராட்சியில் உள்ள துவக்கப்பள்ளி  கட்டிடத்தை மர்ம நபர்கள் இடித்துவிட்டு அதில் இருந்த இரும்பு உள்ளிட்ட  பொருட்களை எடுத்து சென்று விட்டனர். ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி மன்ற  தலைவர் அனுமதி இன்றி பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.இது சட்டவிரோதமானது. எனவே, பள்ளி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: