பொள்ளாச்சி திமுக கோட்டை என நிரூபிப்போம் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிரசாரம்

பொள்ளாச்சி :  கோவை தெற்கு மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சியில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.  பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், எம்பி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் கேஎம் நாகராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன், துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன்,  முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல்செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, நகர கழக பொறுப்பாளர் வடுகை பழனிசாமி, துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பனப்பட்டி வேலுமணி, ஒன்றிய பொறுப்பாளர் மருதவேல், ஆதி திராவிடர் நலக்குழு திப்பம்பட்டி ஆறுச்சாமி, வி.பி.சந்திரசேகர், வக்கீல் அதிபதி, வக்கீல் கிரி, கோசி மணிகண்டன், கருப்பையா  கொமதேக மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசியதாவது: கடந்த 10ஆண்டுகளில் அதிமுக  ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தைரியம் இல்லாமல் இருந்தனர். கடந்த மே மாதம் திமுக அட்சி அமைந்த நேரத்தில், கொரோனா  இரண்டாம் அலை இருந்தது. அதிமுக ஆட்சியின்போது கொரோனா முதல் அலையில்,  மக்களிடம் எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தாமல் விட்டனர். கொரோவிலும் கொள்ளையடித்த ஆட்சி அதிமுக ஆட்சிதான். ஒரு வருடத்தில் ஒரு கோடி தடுப்பூசிதான் போடப்பட்டது. ஆனால், கடந்த 9 மாதங்களில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டது. இதனால்,  மூன்றாவது அலையை கடந்துள்ளோம்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். 9 மாதங்களில் கோவை மாவட்டத்துக்கு பல நலத்திட்டங்களை  முதல்வர் வழங்கியுள்ளார். கலைஞர் வழியில் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என தலைவர் மு.க.ஸ்டாலின் நிரூபித்து கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் அரசு கஜானா காலியாக இருந்தது. 6 லட்சம் கோடி கடன் வைத்தது அதிமுக. ஆனால், கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் கொடுத்தது திமுக அரசுதான். மகளிருக்கு இலவச பஸ் பயணம், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் உள்ளது.

நிதி நிலையை சரிசெய்து விரைவில், மகளிருக்கு மாதம் ரூ.1000 கொடுக்கப்படும். பொள்ளாச்சி அதிமுக கோட்டை அல்ல, திமுக கோட்டை என நிரூபித்து காட்டுவோம். தமிழகத்தில் திமுக இருக்கும் வரை, பாஜ  கால் ஊன்றாது. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும். பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங்ரோடு மற்றும்  தென்னை வாரியம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகளானவுடன், அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும். பொள்ளாச்சி நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி அனைத்து வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து விடுவீர்கள் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: