வரலாற்று புராணங்கள் ஆதாரமாக உறுதி திருமலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார்: அறங்காவலர் குழு தலைவர் பேச்சு

திருமலை: திருமலையில் தான் அஞ்சனாதேவிக்கு ஆஞ்சநேயர் பிறந்தார் என்று வரலாற்று புராணங்கள் ஆதாரமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தெரிவித்தார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் ஆகாச கங்கை உள்ளது. இங்கு தான் அஞ்சனாதேவி ஆஞ்சநேயரை பெற்றெடுத்தார் என்பதற்கான வரலாற்று புராணங்களில் ஆதாரமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்தாண்டு  ஏப்ரல் 21ம் தேதி ராமநவமியன்று அப்போதைய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் ஆவணங்கள் வெளியிடப்பட்டது.

பின்னர், ஆகாச கங்கை தீர்த்தம் அருகே அஞ்சனாதேவி மற்றும் பால ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று இங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி அழகுபடுத்துவதற்காக பூமி பூஜை நடந்தது. இதில், தேவஸ்தான அறங்காவலர் தலைவர் சுப்பா, தலைமை செயல் அதிகாரி ஜவகர், கூடுதல் செயல் அதிகாரி தர்மா, விசாக சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமி, துளசி பீர் சேவண்யாஸ், சித்ரகூடம் ராமபத்ராச்சாரியா மகராஜ், அயோத்தி, ராமஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவகிரிஜந்திரம் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா பேசுகையில், ‘‘அஞ்சனாத்ரியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோயிலில் எந்த மாற்றமும் செய்யவில்லை.  ஆஞ்சநேயர் இங்கு தான் பிறந்தார் என பல்வேறு பண்டிதர்கள், அறிஞர்கள் கூறினர். இதையடுத்து, தேவஸ்தானம் சார்பில் சிறப்பு கமிட்டி அமைத்து ஓராண்டுகாலம்  ஆராய்ச்சி செய்து அறிவியல் ரீதியாகவும், வரலாற்று கல்வெட்டுகள் ஆதாரமாக அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை உறுதி செய்யப்பட்டது,’’ என்றார்.

Related Stories: