அதிகாரிகளுக்கு தண்ணீ காட்டிவிட்டு கூகுள் பே, போன் பே மூலம் பட்டுவாடா

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களுக்கு வேட்பாளர்கள் கூகுள் பே, போன் பே மூலம் பணம் பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ளன. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட சில வார்டுகளில் வேட்பாளர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை வாங்கிச் செல்கின்றனர். அதன்பின், மாலை நேரங்களில் அவர்களுக்கு கூகுள் பே மற்றும் போன் பே மூலமாக பணம் பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் கணக்கில் இருந்து பணம் அனுப்பினால் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து விடுவார்கள் என்பதால் வேட்பாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது.

தேர்தலுக்கு இரு நாட்களே உள்ள நிலையில், தற்போது சில வேட்பாளர்கள் இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணம் பட்டுவாடா செய்வதால், அதே வார்டில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர். வசதி படைத்த வேட்பாளர்கள் இதுபோன்று பணம் பட்டுவாடாவில் ஈடுபடுவதால், அதே வார்டில் போட்டியிலும் மற்ற வேட்பாளர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது என தெரியாமல் புலம்பி வருகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் வலம் வருபவர்களின் வங்கி கணக்குகளை சோதனை மேற்கொண்டால் பல வேட்பாளர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: