நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜ ரகசிய கூட்டணி: முத்தரசன் பரபரப்பு குற்றச்சாட்டு

துவரங்குறிச்சி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவும், பாஜவும் ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக முத்தரசன் பரபரப்பு குற்றம் சாட்டினார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசுகையில், நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜ- அதிமுக இடையே ரகசிய உடன்பாடு உள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக திருச்சி மாநகராட்சி 23, 65வது வார்டுகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் முத்தரசன் பேசுகையில், திமுக கூட்டணி கொள்கையுள்ள கூட்டணி. அதனால் தான் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், தற்போது உள்ளாட்சி தேர்தல் வரை தொடர்கிறது. அதிமுக கூட்டணி கொள்கையற்ற கூட்டணி. அதனால்தான் தற்போது அவர்கள் பிரிந்து விட்டனர். பாஜவினர் குறுகிய அரசியல் நோக்கத்தோடு மத மோதல்களை உருவாக்குவதன் மூலமாக அரசியல் ஆதாயங்களை தேடுகின்றனர். தற்போது, கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் உள்ளதால் மத பிரச்னையை தூண்டி விட்டுள்ளது என்றார்.

Related Stories: