உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய மாயாவதியின் அரசியல் வாரிசு மீது வழக்கு: 3 வேட்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு

சீதாபூர்: உத்தரபிரதேச பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய மாயாவதியின் அரசியல் வாரிசு மற்றும் 3 வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மருமகனான பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த். இவர் மாயாவதியின் அரசியல் வாரிசு என்று பேசப்படுகிறார்.

இந்நிலையில் சீதாபூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஆகாஷ் ஆனந்த் பேசுகையில், ‘உத்தரபிரதேச அரசானது புல்டோசர் அரசு; துரோகிகளின் அரசாக செயல்படுகிறது. தங்களது கட்சியில் இளைஞர்களை பசியுடன் வாடவைத்துவிட்டு, முதியவர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்தும் ஆட்சி முறையை போன்று இங்கு ஆட்சியை நடத்தி வருகிறது. மாநிலத்தில் 16,000 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விசயத்தில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் 16,000 கோடி ரூபாயை பாஜக பறித்துள்ளது’ என்றார். இவரது பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இருந்ததாக பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து ஆகாஷ் ஆனந்த், கட்சியின் வேட்பாளர்கள் மகேந்திர யாதவ், ஷியாம் அவஸ்தி, அக்ஷய் கல்ரா, பேரணி அமைப்பாளர் விகாஸ் ராஜ்வன்ஷி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீதாபூர் போலீஸ் எஸ்பி சக்ரேஷ் மிஸ்ரா தெரிவித்தார். மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதி சீதாப்பூரில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய மாயாவதியின் அரசியல் வாரிசு மீது வழக்கு: 3 வேட்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: