ராட்டர்டாம் ஓபன் டென்னிஸ்; பைனலில் சிட்சிபாஸ்-ஆகர் அலியாசைம் மோதல்

ராட்டர்டாம்: ராட்டர்டாம் ஓபன் டென்னிஸ் பைனலில் கிரீஸ் வீரர் சிட்சிபாசும், கனடா வீரர் ஆகர் அலியாசைமும் மோதவுள்ளனர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த 2வது செமி பைனலில் 21 வயதேயான கனடாவின் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரம் பெலிக்ஸ் ஆகர் அலியாசைமுடன், ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லேவ் மோதினார். ஆகர் அலியாசைம், தற்போது ஏடிபி தரவரிசையில் 9ம் இடத்தில் உள்ளார். ஆண்ட்ரே ரப்லேவ் தரவரிசையில் தற்போது 7ம் இடத்தில் உள்ளார். இதில் முதல் செட்டை 7-6 என டைபிரேக்கரில் ரப்லேவ், கடும் போராட்டத்திற்கு பின்னர் கைப்பற்றினார்.

ஆனால் 2வது செட்டில் ஆகர் அலியாசைமின் சர்வீஸ்களில் அனல் பறந்தது. அந்த செட்டை 6-4 என ஆகர் அலியாசைம் கைப்பற்றி, ரப்லேவுக்கு அதிர்ச்சியளித்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்குள், 3வது செட்டையும் 6-2 என கைப்பற்றி, இப்போட்டியில் 6-7, 6-4, 6-2 என 3 செட்களில் ரப்லேவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆகர் அலியாசைம், ஏடிபி தரவரிசையில் தற்போது 4ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசை எதிர்த்து, பைனலில் மோதவுள்ளார். முன்னதாக நடந்த செமி பைனலில் செக்.குடியரசின் 20 வயதேயான ஜிரி லெஹக்காவை 4-6, 6-4, 6-2 என 3 செட்களில் சிட்சிபாஸ் வீழ்த்தினார்.

Related Stories: