ஒரத்தூரில் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் திடீர் மறியல்-அதிகாரிகள், போலீசார் சமரசம்

மன்னார்குடி : ஒரத்தூர் ஊராட்சியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து செயல்பட கோரி நேற்று காலை விவசாயிகள் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஓரத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியை அடுத்த ஓரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஊராட்சி பகுதியாக திகழும் இப்பகுதியில் அரசின் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ஒரத்தூரில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை. இருப்பினும், இது நிரந்தர நெல் கொள்முதல் நிலையமாக இருந்து வருவதால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யும் வகையில் இக் கொள்முதல் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொண்டு வந்து குவித்துள்ளனர். நெல் மூட்டைகள் வந்த போதிலும் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையால் அனைத்து நெல்மூட்டைகளும் பனியில் நனைந்து வீணாகி வருகிறது.

இந்நிலையில், ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை உடன் திறந்து செயல்பட கோரி மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் ஒரத்தூரில் நேற்று காலை விவசாயிகள் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீசார் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரே நாளில் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக மன்னார்குடி-முத்துப்பேட்டை இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: