சேலம்-சென்னை விமான சேவை மார்ச் மாதம் மீண்டும் துவங்கும்: திமுக எம்பிக்கு இணை அமைச்சர் உறுதி

சேலம்: சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி விமான சேவை, உதான் திட்டத்தின் கீழ் கடந்த 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. ட்ரூஜெட் விமான நிறுவனம், தனது விமான சேவையை தொடர்ந்து வழங்கியது. கொரோனா  கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த ஆண்டு, இந்த விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக்கொண்டதும், மீண்டும் சேவையை தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த ஜுன் 2ம் தேதிக்கு பின், தனது விமான சேவையை ட்ரூஜெட் நிறுவனம் நிறுத்திக் கொண்டது. இதனால், சேலம்-சென்னை விமான போக்குவரத்து இல்லாமல் போனது.

இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் பேசுகையில், சேலம்-சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதை ஏற்று மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் விஜய்குமார்சிங், எம்பி பார்த்திபனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘சேலம்-சென்னை இடையே 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ட்ரூஜெட் நிறுவனம் விமானத்தை இயக்கியது. 2021 மார்ச் மாதத்தில் மேலும் ஓராண்டிற்கு அதன் ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்நிறுவனம் விமானத்தை இயக்கவில்லை. இதன்காரணமாக புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வரும் மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும், சேலம்-சென்னை இடையே விமான போக்குவரத்து தொடங்கப்படும்’’ எனக்கூறியுள்ளார்.

Related Stories: