ஆப்கானிஸ்தானில் அவலம்: பெண்களை கூட்டமாக கடத்தி பலாத்காரம் செய்யும் தலிபான்

காபூல்:  பெண்களை தலிபான்கள் கூட்டம் கூட்டமாக கடத்தி சென்று பலாத்காரம் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க கூட்டு படைகள்  வெளியேறின. இதையடுத்து, தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது.  தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம்  மசார் இ ஷெரீப் நகரில் 40 பெண்களை தலிபான்கள் சிறை பிடித்ததாகவும், அவர்களில் 8 பேரை கூட்டு பலாத்காரம் செய்தனர்  என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  

இது குறித்து அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண பல்கலைகழக பேராசிரியர் மியா ப்ளூம்  கூறுகையில், ‘தலிபான்களின் பலாத்காரத்தில் உயிர் தப்பிய பெண்களை அவர்களின் குடும்பத்தினர் அடித்து கொலை  செய்து விட்டனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்த சிலர் எனக்கு இந்த தகவலை  தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது. அப்பாவி பெண்கள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டது  உள்ளூர் மக்களுக்கு தெரியும்.  அங்கு உள்ள மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலை நாட்டு ஊடகங்கள் எதிலும் இந்த செய்தி வெளியாகவில்லை.

தலிபான்களால் கடத்தப்பட்ட பெண்களை மீட்கக் கோரி, பெண்கள் அமைப்பினர் கடந்த மாதம் காபூலில் பேரணி நடத்தினர். தலிபான்களின் தற்போதைய ஆட்சியில் ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றவர்கள் கடுமையான தாக்குதலையும், மரணத்தையும் சந்திக்கும் அபாயம் உள்ளது என மனித உரிமை அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது,’ என தெரிவித்தார். இதற்கிடையே, தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட சில பெண்களை அவர்களின் உறவினர்கள் வந்து மீட்கவில்லை. இதனால், அவர்கள்  எங்கள் பிடியில்தான் உள்ளனர்,’’ என்றார்.

முறை தவறியவர்களா?: தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானில் பெண்களுக்காக ‘பஸ்துன்வாலி’ என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில், திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு வெளியில் பெண்கள் பாலியல் உறவு கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இதுபோல், முறை தவறிய பெண்களைதான் தலிபான்கள் கைது செய்து அழைத்து சென்று தண்டனை அளிப்பதாகவும், பலாத்காரம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: