வட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்: பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு: வட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாவட்டத் தலைவர் தாட்சாயிணி, மாவட்ட செயலாளா் வி.அரிகிருஷ்ணன் ஆகியோர் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய ஆர்டிஓக்களிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 ஆர்டிஓக்களின் கீழ் 8 வட்டாட்சியர் அலுவலகங்களும், 8 வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் செயல்படுகின்றன.  

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, 100 நாள் வேலை உள்பட அனைத்து அரசு சார்ந்த நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்களை சார்ந்தது. ஆனால், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றுத்திறனாளி உதவித் தொகை, 100 நாள் வேலைத் திட்டம் ஆகிய கோரிக்கைகள் மீது முறையாக தீர்வுகாண மறுப்பதும், அலைகழிப்பதும் தொடர்கிறது. இதுகுறித்து, மாவட்ட கலெக்டரின் குறைதீர் கூட்டத்தில் மட்டுமே முறையிட வாய்ப்புள்ளது. இது மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தீர்வு காண்பதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

கடந்த 2021 டிசம்பர் 24ம் தேதி கலெக்டரின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இதுபற்றி விவாதித்து, குறைதீர் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நிவாரணம் உடனடியாக பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில், மாதந்தோறும் குறிப்பிட்ட கிழமை, நேரம் ஆகியவற்றை தீர்மானித்து, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது, சங்க நிர்வாகிகள் லிங்கன், சுபசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: