ஒடுகத்தூர் அருகே இரவுதோறும் தோல் கழிவுகள் எரிப்பதால் மக்கள் கடும் அவதி

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோல்தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலையில் காலணிகள், பர்ஸ், பெல்ட் போன்ற தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தோல்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தோல் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவை திறந்தவெளியில் இரவுதோறும் எரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் காற்று மாசுபடுவதோடு மட்டுமின்றி நச்சுபுகையும் வெளியேறுகிறது. தொழிற்சாலைக்கு அருகே பள்ளிகள், மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. நச்சுப்புகை பல நேரங்களில் பல மணிநேரம் நீடிப்பதால் கிராம மக்கள்  மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: