நாகை நகராட்சியில் அதிமுக தனித்து போட்டி: ஓ.எஸ்.மணியன் அறிவிப்பால் பாஜக கடும் அதிர்ச்சி

நாகை: நாகை நகராட்சியில் 36 வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பால் பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் நேற்றுமுன்தினம் மாலை தொடங்கி இரவு வரை நடந்தது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடந்த இந்த நேர்காணலில், நாகை நகராட்சிக்குட்பட்ட 36வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் கலந்துகொண்டனர்.

நேர்காணலுக்கு பின்னர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு வார்டுகளில் கூட போட்டியிடுவதற்கு பாஜகவினர் இதுவரை சீட் கேட்கவில்லை. இதனால் 36 வார்டுகளிலும் அதிமுக போட்டியிட உறுப்பினர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். நேர்காணல் முடிந்த பின்னர் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும். நாகை நகராட்சியில் உள்ள 36வார்டுகளிலும் அதிமுக போட்டியிட உள்ளது. அதிமுகவை விமர்சித்து பேசிய பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் அதிமுக குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றவர். அவரே அப்படி பேசியிருக்க கூடாது. அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. இது நாகரீகமான அரசியல்வாதி பேசக்கூடிய வார்த்தை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி நாகை மாவட்ட பாஜக தலைவர் நேதாஜி கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் குறித்து இரண்டு கட்சிகளின் பேச்சுவார்த்தை முடிவு இன்னும் எட்டப்படவில்லை. பாஜக சார்பில் சென்னையில் இன்று (நேற்று) தான் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்துள்ளது. இதில் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கேட்கும். ஆனால் அதற்குள் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இப்படி பேசியிருப்பது வருத்தம் தருகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தன்னிச்சையான அறிவிப்பால், நாகை மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: