உடன்குடி அருகே மாநிலத்திலேயே முதல்முறையாக நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்

உடன்குடி : தமிழகத்திலேயே முதல் முறையாக உடன்குடி அருகே கடாட்சபுரத்தில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் விறுவிறுப்பாக நடந்தது.தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடியில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே கடாட்சபுரத்தில் நடந்த இந்த ஓட்டப்பந்தயத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல்  உள்ளிட்ட  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 32 வேட்டை நாய்கள் மட்டும் பங்கேற்றன.

இதற்காக 150 மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு இரண்டு நாய்களாக பந்தயத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. மும்பையிலிருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினர் நீண்ட கம்பியில் ஒரு டப்பாவுடன் இணைத்து முயல் பொம்மையை பொருத்தி இழுவை கம்பியுடன் இணைத்தனர். போட்டி துவங்கியதும் சுருள் கம்பியால் மிக வேகமாக இழுக்கப்பட்ட முயல் பொம்மையை நாய்கள் பிடிக்கும் வகையில் விரைவாக ஓடி, 150 மீட்டர் இலக்கை கடந்தன.

இதற்காக 4 கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி சீசர்ஸ் ரேஸ் கிளப் அன்புராஜ் எனபவரின் நாய் ஹெர்குலிஸ் முதலிடத்தையும், கன்னங்குளத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவரின் நாய் பாப்பா இரண்டாமிடத்தையும், திசையன்விளையை சேர்ந்த கதிர் என்பவரின் நாய் 3ம் இடத்தையும், புதுகுளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பரின் நாய் பிளாக்கி 4ம் இடத்தையும் வென்றன.

 தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றிபெற்ற நாய்களுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில்  முதல்பரிசை நங்கைமொழி பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ், 2ம் பரிசை செம்பொன்குடியிருப்பு வைத்தியர் முத்துவேல், 3ம் பரிசை கரூர் பழனிச்சாமி, 4ம் பரிசை கெவின் ஆகியோர் வழங்கினர். புதிதாக நடத்தப்பட்ட நாய்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை சீசர்ஸ் ரேஸ் கிளப் தலைவர் அருள்ராஜ், செயலாளர் அன்புராஜ், பொருளாளர் அண்ணாத்துரை மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: