அறநிலையத்துறை பணியாளர்களின் பணிமாறுதல் வழிகாட்டி நெறிமுறை: ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டார்

சென்னை: அறநிலையத்துறை பணியாளர்களின் பணிமாறுதலுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிலையங்களின் நலன் மற்றும் நிர்வாக நலன்கருதி அறநிலையங்களின் பணியாளர்களை பணிமாறுதல் செய்ய ஆணையருக்கு அதிகாரம் வழங்கி விதி திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியாளர்களுக்கான பணி மாறுதல் குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்படுத்தி உத்தரவிடப்படுகிறது.

பொது மாறுதல்

* ஒரே அறநிலையத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வெளித்துறை பணியாளர்கள் தற்போது அவர் பணிபுரியும் அறநிலையத்தின் செயல் அலுவலர் நிலைக்கு ஈடான செயல் அலுவலர் நிலையில் உள்ள மற்றொரு அறநிலையத்திற்கு மாறுதல் செய்து ஆணையரால் உத்தரவிடப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அறநிலையங்களின் பணியாளர் பட்டியல் மண்டல இணை ஆணையரால் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பட்டியலிலிருந்து மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மற்ற அறநிலையத்திற்கு பணிமாறுதல் செய்யப்படும்.

* பணிமாறுதல் செய்யப்பட்ட பணியாளர்களின் பணி நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது. முதுநிலை, பதவி உயர்வு ஆகியவை அவர் முதன்முதலில் நியமனம் செய்யப்பட்ட கோயிலில் தொடர்ந்து பெறத் தகுதியுடையவர்.

* பணிமாறுதல் செய்யப்பட்ட பணியாளர் மீது சட்டப்பிரிவு 56ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பணியிட மாற்றம் செய்யப்பட்ட அறநிலையத்தின் அறங்காவலர் குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

* அதிகமாக உள்ள பணியாளர்களை தேவைப்படும் பிற அறநிலையங்களுக்கு மாறுதல் செய்யலாம். குறிப்பிட்ட பணியில் அனுபவமிக்க பணியாளர்களையும், தொழில்நுட்ப அறிவு உள்ள பணியாளர்களையும் அவர்களது சேவை தேவைப்படும் பிற அறநிலையங்களில் நிர்வாக ரீதியான ஒழுக்கத்தை நிலை நிறுத்திட பணிமாறுதல் செய்யலாம்.

* ஆணையரால் பிறப்பிக்கப்படும் பணிமாறுதல் உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பணியாளரை பணியில் இருந்து விடுவித்தும், பணிமாறுதல் செய்யப்பட்ட அறநிலையத்தில் பணிநியமன ஆணை வழங்கியும் சம்பந்தப்பட்ட அறநிலையங்களின் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

விருப்ப மாறுதல்:

* பணியாளர் பணிபுரியும் மற்றும் மாறுதல் கோரும் அறநிலையங்களின் அறங்காவலர் குழு ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

* பணிமாறுதல் கோரும் அறநிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஆட்சேபனைக் கோரி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆட்சேபனை வரப்பெறின் வந்துள்ள ஆட்சேபனையின் மீது விருப்ப மாறுதலை கோரும் பணியாளர்களின் விளக்கம் பெற்று இறுதி முடிவை அறங்காவலர் குழு எடுத்து உரிய காரணங்களுடன் ஆணையர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.

* பணியாளர் முன்பு பணிபுரிந்த அறநிலையத்திற்கே திரும்ப வர விரும்பினால், ஓராண்டிற்குள் தனது விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும். தவறினால் முன்பு பணிபுரிந்த அறநிலையத்தில் அவரது பணி உரிமைகள் அனைத்தும் காலாவதியாகிவிடும். மாறுதல் செய்யப்பட்ட அறநிலையத்தின் முழு நேர ஊழியராக கருதப்படுவார்.

* விருப்ப மாறுதல் கோரும் பணியாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை உத்தேசிக்கப்பட்டிருந்தாலோ அல்லது தண்டனை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் இருந்தாலோ அல்லது  ஊழல் தடுப்புதுறையின் விசாரணைக்கு உட்பட்டிருந்தாலோ அவரை மாறுதல் செய்ய இயலாது.

 உள்துறை பணியாளர்கள்

* உள்துறை பணியாளர்களை பணிமாறுதல் செய்யும் போது சம்பந்தப்பட்ட அறநிலையத்தில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களை கருத்தில் கொண்டு அதனை மீறாமல் பணிமாறுதல் செய்யப்பட வேண்டும்.

Related Stories: