ராகுல் நாளை பஞ்சாப் பயணம்: 117 காங். வேட்பாளர்களுடன் பொற்கோயிலில் வழிபடுகிறார்

சண்டிகர்: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை ஆளும் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது.

உபி, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு கட்சியினர் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதனால் கோவாவில் காங்கிரஸ் புது டெக்னிக்கை கையாண்டுள்ளது. கட்சி மாற மாட்டேன் என கோயில், சர்ச், மசூதிகளில் சத்தியம் வாங்கிய பிறகே வேட்பாளர்களை அறிவித்தது.

இந்நிலையில், பஞ்சாப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமிர்தசரஸ் வரும் அவர் நேராக பொற்கோயிலுக்கு சென்று வழிபட உள்ளார். அப்போது அவருடன் கட்சியின் 117 வேட்பாளர்களும் உடன் செல்ல உள்ளனர். அங்கு, லங்கர் எனப்படும் பிரசாத உணவையும் உண்ணுகின்றனர். அங்கிருந்து துர்கை அம்மன் கோயில், வால்மீகி தீரத் தலங்களுக்கும் ராகுல் செல்கிறார். பிற்பகலில் ஜலந்தர் செல்லும் ராகுல், அங்கு மெய்நிகர் பேரணி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார்.

உபி அமைச்சருக்கு நோட்டீஸ்: உபியில் சிகர்பூர் தொகுதி பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அம்மாநில அமைச்சர் அனில் சர்மாவின் மகன் குஷ், சிலருக்கு 100 ரூபாய் நோட்டுக்களை தருவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. வாக்காளர்களுக்கு அமைச்சரின் மகன் பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அமைச்சர் அனில் சர்மா 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கக் கோரி மாநில தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Related Stories: