பிரதமர் மோடி வலியுறுத்தல்; உள்ளூர் தயாரிப்பு பொருட்களை ஆதரிக்கும் பிரசார தூதராகுங்கள்: 29 சிறுவர்களுக்கு பால் புரஸ்கார் விருது வழங்கி கவுரவிப்பு

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 29 சிறுவர்களுக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்கி  பிரதமர் மோடி கவுரவித்தார். புத்தாக்கம், கல்வி, விளையாட்டு, கலை கலாச்சாரம், சமூக சேவை மற்றும் தீரச் செயல்கள் ஆகிய 6 துறைகளில் சாதனை புரிந்த சிறுவர்களுக்கு ஆண்டுதோறும் பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான பால் புரஸ்கார் விருதுக்கு 14 சிறுமிகள் உட்பட 29 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதக்கம், ₹1 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு, பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தற்போது அரசாங்கம் வகுத்துள்ள அனைத்துக் கொள்கைகளும் இளைஞர்களை மையமாகக் கொண்டவை. உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இளம் இந்தியர்கள் இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

நேதாஜி மூலம் தேசமே முதலில் என்ற உணர்வையும், கடமையை செய்வதற்கான உத்வேகத்தையும் நாம் பெறுகிறோம். அதன்படி, உங்கள் பாதையில் தேசத்திற்கான கடமையை நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் பணி நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். தற்சார்பு இந்தியாவை அடையச் செய்யும் உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவதற்கான பிரசாரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதன் தூதர்களாக சிறுவர்கள், இளைஞர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

விருதுநகர் சிறுமிக்கு விருது:புத்தாக்க கண்டுபிடிப் புகளுக்காக தமிழகத்தை சேர்ந்த விஷாலினி மற்றும் அஸ்வதா பிஜூ ஆகிய இருவருக்கு பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதில், விருதுநகரை சேர்ந்த டாக்டர் தம்பதி நரேஷ்குமார் - சித்ரகலாவின் மகள் விஷாலினி. 2ம் வகுப்பு மாணவி. இவர் வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் கூடிய வீட்டிற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் வெள்ள பேரிடர் காலங்களில் மக்கள் தண்ணீரில் மூழ்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

Related Stories: