தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் திறந்தவெளி மைதானங்களில் 500 பேருடன் பிரசார கூட்டம்: தேர்தல் ஆணையம் அனுமதி

புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை சட்டப்பேரவை நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவதால், இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் பேரணிகள், பிரசார பொதுக்கூட்டங்களுக்கு ஜனவரி 22ம் தேதி வரை  தேர்தல் ஆணையம் தடை விதித்தது. நேற்றுடன் இது முடிந்த நிலையில், தடையை நீட்டிப்பது பற்றி தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. அதில், வரும் 31ம் தேதி வரை இந்த தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், முதல் மற்றும் 2ம் கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளில்  பொதுக் கூட்டங்களுக்கு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

* வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வதற்கு தற்போது 5 பேர் வரை செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது. இது, 10 பேராக உயர்த்தப்பட்டுள்ளது.

* முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில்  வரும் 28ம் தேதி முதல் பிப்ரவரி 8ம்  தேதி வரை திறந்த வெளிமைதானங்களில் பிரசாரங்கள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 500 பேர் வரை கலந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் மீது நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தலைக் கருத்தில் கொண்டு, வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை வழங்குவது, இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது அதிகரித்து வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசியல் கட்சிகள் செய்யும் இதுபோன்ற நடவடிக்கை, ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலையும்,  அரசியலமைப்புக்கும் பாதகத்தையும் செய்யும் செயலாகும். அரசியல் சாசனத்தை மீறி, வாக்காளர்களிடம் ஆதரவை பெறும் இதுபோன்ற கவர்ச்சி நடவடிக்ைககளுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தடை விதிக்க வேண்டும்.அரசு கஜானாவில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அல்லது இலவச பொருட்களை தரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னம் பறிக்கப்பட வேண்டும். அக்கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இதற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: