தமிழகம் முழுவதிலும் 1,268 நில அபகரிப்பு வழக்குகள் நிலுவை: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: ‘தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது,’ என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் 6 வாரத்தில் பதிலளிக்கும்படி, கடந்தாண்டு செப்டம்பர் 25ம் தேதி உத்தரவிட்டது. இதேபோல், ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரின் நில மோசடி வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்குகள் கடந்த மாதம் 14ம் விசாரணைக்கு வந்தபோது, ‘நில அபகரிப்பு வழக்குகளை வழக்கமான நீதிமன்றங்களே விசாரித்து வருகின்றன,’ என உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முத்துலட்சுமி தரப்பு வழக்கறிஞர் இளங்கோவன், ‘நில அபகரிப்பு வழக்குகளை அதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்க முடியும். தமிழகம் முழுவதும் 36 சிறப்பு நீதிமன்றங்கள் இதற்கென்று தனித்தனியாக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன,’ என வாதிட்டார். பின்னர், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘தமிழகத்தில்  சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் மொத்த 785 வழக்குகளும், நிலம் அபகரிப்பு தொடர்பாக 2,848 முதல் தகவல் அறிக்கைகளும், மீதமுள்ள மாவட்டங்களில் 483 வழக்குகளும், 42 முதல் தகவல் அறிக்கைகளும் நிலுவையில் உள்ளன. தமிழக முழுவதும் மொத்தமாக 1,268 நில அபகரிப்பு வழக்குகளும், 2,890 முதல் தகவல் அறிக்கைகளும் நிலுவையில் உள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: