பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 7 கோடி பேர் பயணம் செய்ததில் ரூ.138 கோடி வருவாய்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்.

முதலமைச்சர் கொரோனா தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

பொங்கலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 11, 12 மற்றும் 13.01.2022 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 18,232 தினசரி பேருந்துகளுடன், 1,514 சிறப்புப் பேருந்துகள், 2 கோடியே 57 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 3 கோடியே 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக 65 கோடியே 58 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டை விட அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 1,231 தினசரி பேருந்துகளும், 201 சிறப்புப் பேருந்துகளும், 28 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 96 லட்சம் பயணிகள் அதிகமாக பயணம் செய்ததன் மூலம், 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்தள்ளது.

பொங்கலுக்கு பின்பு தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த பேருந்துகள் இயக்கம்

பொங்களுக்கு பின்பு, கடந்த 15, 17,18 மற்றும் 19.01.2022 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,164 தினசரி பேருந்துகள், 2 கோடியே 94 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 3 கோடியே 80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக 72 கோடியே 49 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டை விட அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 1,271 தினசரி பேருந்துகள், 13 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, ஒரு கோடியே 7 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒட்டுமொத்தமாக சுமார் 7 கோடி பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக சுமார் 138 கோடியே 7 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: