5,800 காவலர்களின் நலன் கருதி காவல் துறை உருவாக்கிய ‘விடுப்பு செயலி’; முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: சென்னை காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள விடுப்பு செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை பெருநகர காவல் துறையில் 5,800 காவலர்களை கொண்ட மிகப்பெரிய எண்ணிக்கையிலான, ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்கள் முதல், சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி நிலையில் உள்ளவர்கள் வரை தங்களின் பணிச்சுமைக்கு இடையே தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விடுப்பு பெற வேண்டி வழிவழியாக உதவி ஆய்வாளர் / ஆய்வாளர் / உதவி ஆணையாளரை நேரடியாக சந்தித்து மனு சமர்ப்பித்து விடுப்பாணை பெற்று, பின்னர் ஆயுதப்படை அலுவலகத்தில் தினசரி நாட்குறிப்பில் முறையாக பதிந்து செல்லவேண்டும்.

இது கடினமான பணியாக இருப்பதால் காவலர்களின் நலன் கருதி விடுப்பு செயலி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவலர்களின் விடுப்பில் வெளிப்படை தன்மை மற்றும் சிரமம் மற்றும் தாமதத்தை தடுக்கும், விடுப்பு செயலியை ேநற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். காவலர்கள் தங்களிடம் உள்ள கைப்பேசியில் இச்செயலியினை பதிவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நேரடியாக விடுப்பு வேண்டி ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம். இது வழிவழியாக அவர்களுடைய மேல் அதிகாரிகளுக்கு சென்றடையும். விடுப்பு ஆணை பெற்றுக் கொண்ட காவலர்கள் நேரடியாக அலுவலகத்துக்கு சென்று கடவுச்சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம். இந்த செயலியில் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் மூன்று மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று மணி நேர காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து மேலனுப்ப தவறினால் படிப்படியாக காவலர்களது கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயர் அதிகாரிகளை சென்றடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலி, காவலர்களின் விடுப்பு எடுக்கும் நடைமுறை சிரமத்தை முழுமையாக குறைப்பதோடு, வெளிப்படையான தன்மையை உருவாக்குகிறது. இணையதளம் வசதி இல்லாதவர்கள் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டுள்ள செயலி மூலம் குறுஞ்செய்தி வாயிலாக விடுப்பு பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: