1956ம் ஆண்டுக்கு முன்பே இறந்து இருந்தாலும் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ‘கடந்த 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வாரிசு உரிமை சட்டத்துக்கு முன்பாகவே இறப்புகள் ஏற்பட்டு இருந்தாலும், தந்தை உறவு சொத்தில் மகள்களுக்கும் உரிமை உண்டு,’ என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1956ம் ஆண்டில், ‘இந்து வாரிசு உரிமைச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன் பிரிவு 6, 2005ம் ஆண்டில் திருத்தப்பட்டது. அதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு எனக் கூறப்பட்டது.  இந்தியாவை பொருத்தவரையில் இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி, 2005ம் ஆண்டிற்கு முன்பாக மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு இருந்தது. பின்னர், 2005ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இந்த சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மகள்களுக்கும் இந்த சொத்துரிமை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தரப்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘ராமசாமி என்பவரின் அண்ணன் மாரப்பா. இவர், கடந்த 1949ம் ஆண்டு இறந்து விட்டார். இவருடைய மகள் குப்பாயம்மாள். இவரும் தற்போது உயிருடன் இல்லை. இந்நிலையில், மாரப்பா என்பவர் பெரிய தந்தை என்பதால் அவரது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் அவருடைய தம்பி வாரிசான  ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே சேரும். பெண்களுக்கு உரிமை இல்லை என தெரிவிக்கின்றனர். 1956ம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே மாரப்பா இறந்து விட்டதால், அவருடைய தம்பி மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா? என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும்,’ என கோரினார்.

இந்த வழக்கை பல கட்டங்களாக விசாரித்து வந்த நிலையில், நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘மாரப்பா இறந்ததுமே அவருடைய சொத்து முழுவதும், அவருடைய மகளான குப்பாயம்மாளுக்கு சென்று விட்டது. அவரும் இப்போது உயிருடன் இல்லாததால், தற்போதுள்ள சொத்துகள் அனைத்திலும் மாரப்பாவின் தம்பி மகன்களுக்கு மட்டுமின்றி, அவருடைய மகள்களுக்கும் உரிமை உண்டு. மேலும், 1956ல் வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு,’ என அறிவித்தனர்.

Related Stories: