ஜம்முவில் சோகம் உறைபனியில் புதைந்த சிறுவன் சடலமாக மீட்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர், கிஷ்துவார் மாவட்டத்தில் உறைபனியில் உயிருடன் புதைந்த 7 வயது சிறுவனின் சடலத்தை போலீசார் மீட்டனர். கிஷ்துவார் மாவட்டம், திலார் கிராமம், மத்வா பகுதியில் வசிப்பவர் பஷீர் அகமது. இவரது மகன் முத்தாரீப் பஷீர் (7). தற்போது அப்பகுதியில் உறைபனி அதிகம் நிலவி வருகிறது. முத்தாரீப் பஷீர், தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். பின்னர் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று, அவரது வீட்டருகே சோதனை நடத்தினர். அப்போது சிறுவனின் வீட்டு மேற்கூரை பனியால் பெயர்ந்து விழுந்து வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததும், அதில் சிறுவன் உறைபனியில் உயிருடன் புதைந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பனிக்குள் சிக்கிய சிறுவனின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை காவல் துணை ஆணையர் அசோக் குமார் சர்மா கூறினார்.

Related Stories: