ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: பராமரிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், ‘ஆலையில் உள்ள உயர் ரக இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த மனுவை ரத்து செய்து, ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் நேற்று இதற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை பயன்படுத்தும் இடத்தை வேதாந்தா நிறுவனம் தற்போது வரையில் சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயந்திரங்களை எடுத்து செல்ல நிறுவனம் விரும்பினால் அதற்கான வசதிகளை அரசு தரப்பில் செய்து தரப்படும். அதேப்போன்று மழைக்காலத்தில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் ஆலை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கண்காணித்து வருகின்றனர். அதனால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: