தருவைகுளத்தில் புகும் உப்பு நீரால் உடன்குடி பகுதியில் மீன்பிடி தொழில், தென்னை, முருங்கை விவசாயம் அழியும் அபாயம்-சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

உடன்குடி : உடன்குடி அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் உப்புநீர் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தில் உட்புகுவதால் உடன்குடி வட்டாரத்தில் நிலத்தடி நீர், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு மீன்பிடி தொழிலும் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோருக்கு சமூக ஆர்வலர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

 உடன்குடி அனல் மின் நிலையம் அமைந்துள்ள 1100 ஏக்கர் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதி ஆகும். அனல் மின் நிலையத்தின் தென்மேற்கு பகுதியில்தான் தாமிரபரணி தென்கால் பாசன இறுதி குளமான எல்லப்ப நாயக்கன் குளம் உள்ளது. எல்லப்பநாயக்கன் குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து அனல் மின் நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள கால்வாய் மூலம் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு தண்ணீர் வரும். குளத்தில் நிரம்பி வழியும் தண்ணீரானது மணப்பாடு கடலில் கலப்பது வழக்கம்.

உடன்குடி அனல் மின்நிலைய பணிகள் துவங்கியதும் இயற்கையான கடல் நீர் உட்புகா வண்ணம் தடுக்கும் அரணான இந்த பகுதியை சுமார் 8 அடி ஆழத்திற்கு மணல் கொண்டு மூடினர். அத்துடன் உடன்குடி, சாத்தான்குளம் வட்டார குளங்களைத் தூர்வாரியதோடு அதில் இருந்த குளத்துமண்ணை எடுத்து நிரப்பி வந்தனர். மேலும் உடன்குடி அனல்மின் நிலையத்தின் பின்புறம் தென்மேற்கு பகுதியிலுள்ள சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் 30 அடி ஆழத்திற்கு மணல் எடுத்து அனல் மின்நிலைய பகுதியில் மண் கொண்டு நிரப்பினர். இதனால் தற்போது இப்பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து விட்டது.

எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து தருவைகுளத்திற்கு வரும் கால்வாயையும் மண் கொண்டு மூடிவிட்டனர். கடந்த 2019ம் ஆண்டில் பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளநீர் அனல் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு இடையூறாக இருந்ததால் இங்குள்ள தடுப்பணையையும் உடைத்தனர். இதனால் தற்போது அனல்மின் நிலைய கட்டுமானப் பணிகளில் இருந்து வெளியேற்றப்படும் உப்பு நீரை அனல்மின் நிலைய நிர்வாகம் குழாய்கள் மூலம் குலசை தருவை குளத்து கால்வாயில் கலந்து விடுகின்றனர். இதனால் தருவைகுளத்து தண்ணீர் முழுவதும் உப்பு நீராக மாறி விட்டது. இதனால் இந்த குளத்து நீரை குடிக்க மட்டுமின்றி குளிக்க முடியாத அவல நிலைதான் ஏற்பட்டுள்ளது.

மேலும் உடன்குடி வட்டாரத்தில் நிலத்தடி நீராதாரத்தையும் உப்புநீர் பாதித்து வருகிறது. இவ்வாறு  உடன்குடி அனல் மின்நிலையத்தில் இருந்து  வெளியேற்றப்படும் உப்புநீரானது குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தில்  உட்புகுவதால் உடன்குடி வட்டாரத்தில் நிலத்தடி நீர், விளைநிலங்கள்  பாதிக்கப்படுவதோடு மீன்பிடி தொழிலும் அழிந்து வருகிறது. இவ்வாறு உள்புகுந்த உப்பு நீரால் குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதியின் பாரம்பரிய பனைத் தொழில் அழிந்து வருவதோடு தென்னை, முருங்கை விவசாயமும் அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாழாகும். எனவே, இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: