மெரினாவில் கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு: கடற்கரையை உலக தரத்தில் அழகுபடுத்த முடிவு

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தி கடற்கரையை சுத்தமாக கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பான வழக்கில் மெரினா கடற்கரை பகுதிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். மெரினாவில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தி கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன் ஒருகட்டமாக கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப் சாலை ஒழுங்குபடுத்தப்பட்டது. அங்கு மீன் வியாபாரம் ெசய்துவந்த சுமார் 300 பேருக்கு ஒருங்கிணைந்த மீன் அங்காடி கட்டப்பட்டு கடைகள் ஒதுக்கப்பட்டன.

இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நேப்பியர் பாலம் முதல் சீனிவாசபுரம் வரையில் 270 ஏக்கர் கடற்கரை பகுதியில் 10 முதல் 12 வரிசையில் கடைகளை அமைக்க லே அவுட் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான சர்வே அடிப்படையில் ஏற்கனவே உள்ள கடைகள் தொடர்பா டிரோன் மூலம் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. கடை வைக்க அனுமதி கேட்டு கடந்த 2021ல் வந்த 1500 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன.

ஏற்கனவே இருந்த கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த குழு அமைக்கப்பட்டு விண்ணப்பதாரர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், லைசென்ஸ், என்ன பொருள் விற்பனை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கையுடன் கடைகள் அமைப்பது தொடர்பான வரைவு வரைபடம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகயோர் இந்த வரைபடத்தில் கடைகளுக்கான சரியான இடங்கள் குறித்து தகவல் தெளிவாக இல்லை. எனவே, மெரினா கடற்கரை பகுதியில் கடைகள் அமைப்பது தொடர்பாக 22ம் தேதி நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று காலை 9 மணிக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் சுற்றுச்சூழல், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது, நீதிபதிகள், கடற்கரையில் நடந்து ெசன்றும் பேட்டரி காரில் சென்றும் 10 இடங்களில் ஆய்வு செய்து கடைகள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர். இதை தொடர்ந்து கடைகளை எத்தனை வரிசையில் அமைக்கலாம், எங்கெல்லாம் அமைக்கலாம் என்பது குறித்து வரும் 2ம் தேதி உரிய உத்தரவு நீதிபதிகள் பிறப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

* 20 ஏக்கர் நீலக்கொடி மண்டலம்
மெரினாவில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 20 ஏக்கர் பகுதி நீலக் கொடி மண்டலமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. நீலக்கொடி சான்று என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் டென்மார்க் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி நிறுவனத்தால் தரப்படும் ஒரு சர்வதேச அங்கீகாரம். சுற்றுச்சூழல் தரம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட, 33 தகுதிகளின் அடிப்படையில், இந்த சான்று கடற்கரைக்கு வழங்கப்படுகிறது.

* கடைகளுக்கு அனுமதியில்லை
நீலக்கொடி மண்டலத்தில் கடைகளுக்கு அனுமதியில்லை. மக்களுக்கான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 40 மூங்கில் நிழற்குடைகள், 40 சாய்வு நாற்காலிகள், 12 அமரும் நாற்காலிகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள், 25 குப்பைத் தொட்டிகள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்ல 12 சக்கர நாற்காலிகள், 4 சிறுவர் விளையாட்டு உபகரணம், 10 தென்னை மரங்கள், 9 துாய்மை இயந்திரங்கள், முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை, பாலூட்டும் அறை உள்ளிட்ட பணிகள் ரூ.7.31 கோடியில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

Related Stories: