பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான்: கெஜ்ரிவால் அறிவிப்பு

மோகாலி: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  மார்ச் 10ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இதன் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. முதல்வர் வேட்பாளரை பொதுமக்கள் தேர்வு செய்யலாம் என்று கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார், இதற்கான இலவச தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு குரல் பதிவு, வாட்ஸ்ஆப் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக தங்களின் விருப்பமான நபரின் பெயரை குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவு செய்யும்படியும் ஆம் ஆத்மி அழைப்பு விடுத்தது. நேற்று முன்தினத்துடன் பொதுமக்களின் இந்த விருப்பத் தேர்வு முடிந்தது. இதனை தொடர்ந்து, ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன்னை கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “சங்ரூர் எம்பி.யான பக்வந்த் மான், செல்போன் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக 93 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த டெலிவாக்கெடுப்பில் பங்கேற்றனர். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று தெளிவாகியுள்ளது. முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவரே பஞ்சாபின் அடுத்த முதல்வர்,” என்றார்.

* 2 முறை எம்.பி

பஞ்சாப் மாநிலம், சங்ரூரில் உள்ள சடோஜ் கிராமத்தை சேர்ந்தவர் பக்வந்த் மான்(48). தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சி மூலமாக பிரபலமான இவர், கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 2021ல் தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர். 2014ம் ஆண்டு ஆம் ஆத்மியில் இணைந்தார். சங்ரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்பி.யானார். தொடர்ந்து 2வது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: