7 மணிநேரம் உணவின்றி குடோனில் அடைப்பு வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் தர்ணா

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, 13ம் தேதி முதல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், கல்யாண உற்சவம், ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்,  இலவச தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பக்தர்களை பல மணிநேரம் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

அவர்களுக்கு தண்ணீர், உணவு வழங்காமல், சிறு குழந்தைகள் இருப்பினும் அவர்களுக்கு பால் கூட கிடைக்காமல்  பக்தர்கள் வேதனையடைந்தனர். இதேபோல், நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு தரிசனத்திற்கு சென்ற பக்தர்களை இரவு 8 மணி வரைக்கும் தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து 7 மணிநேரம் உணவின்றி குடோனில் அடைத்து வைத்ததை கண்டித்து நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் செயல் அதிகாரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஏழுமலையான் கோயில் ராஜகோபுரம் அருகே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர், சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியேயும் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் பக்தர்களை பேசவிடாமல் தரதரவென இழுத்துச்சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த காலங்களில் ஒரு லட்சம் பக்தர்கள் வரை சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்தபோது கூட இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தற்போது, 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே தரிசனத்திற்கு வந்த நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு அதிகாரிகள் அதிக நேரம் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதனால் தான் சாதாரண பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருப்பதியில் தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கொரோனா நிபந்தனைகள் எதையும் கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Related Stories: