திருத்தணி அருகே பரபரப்பு டாஸ்மாக் சுவரில் துளைபோட்டு 450 மதுபாட்டில்கள் கொள்ளை: சிசிடிவி கேமராக்கள் உடைப்பு; மர்ம கும்பல் அட்டகாசம்

திருத்தணி:திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரத்தில் அரசு மதுபான டாஸ்மாக் கடை உள்ளது. கடை மேற்பார்வையாளர்களாக  திருவள்ளூர் அடுத்த தோமூரை சேர்ந்த கங்காதரன்(40), திருத்தணி அடுத்த காஞ்சிப்பாடியை சேர்ந்த பழனி(40) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 5 பேர் கடையில் விற்பனையாளர்களாக பணிபுரிகின்றனர். இந்த கடையில் தினந்தோறும் ரூ.2 லட்சம் வரை  மது விற்பனையாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் விற்பனையாளர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது, கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த 4 கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு திருடுபோனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள்  கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதைத்தொடர்ந்து விற்பனையாளர்கள் கடையில் இருந்த மதுபாட்டில்களை சோதனை செய்தபோது அதில் குவாட்டர்  மற்றும் புல் பாட்டில்கள் என 450 மது பாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுவரில் துளைபோட்டு அதன் வழியாக  கடை உள்ளே வந்து திருடிச் சென்றது  தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: