கர்நாடகாவில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலிபிளவர் மூட்டைக்கு இடையே மறைத்து 2.5 டன் புகையிலை பொருட்கள் கடத்தல்: பண்ணாரி சோதனைச்சாவடியில் டிரைவர் கைது; 2 வேன்கள் பறிமுதல்

சத்தியமங்கலம்: காலிபிளவர் மூட்டைக்கு இடையே மறைத்து புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்திற்குள் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு  சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு காய்கறி வேன்களில் நூதன முறையில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இரு மாநில எல்லையான பண்ணாரி சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை சத்தியமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 2 காய்கறி வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் காலிபிளவர் மூட்டைகளுக்கு இடையே புகையிலை பொருட்கள் 70 மூட்டைகளில் இருந்தன. இவை 2.5 டன் எடையுடையது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 வேன்களையும் ஓட்டி வந்த டிரைவர்களில் ஒருவர் தப்பி ஓடி மறைந்தார். இதைத்தொடர்ந்து மற்றொரு டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு பகுதியைச் சேர்ந்த செம்புலிங்கம் நாயக் (26) என்பதும், காய்கறி மூட்டைகளுக்கு இடையே நூதன முறையில் புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சத்தியமங்கலம் போலீசார் செம்புலிங்கம் நாயக் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மற்றொரு டிரைவரான மைசூரை சேர்ந்த குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: