மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி துவக்கம்: ஆறு தளங்களில் அதிநவீன வசதிகளுடன் அமைகிறது

மதுரை: பொதுப்பணித் துறை கண்காணிப்பில் ஆறு தளங்களில் அதிநவீன வசதிகளுடன், மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன. ஓராண்டில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி, மதுரையில் 2 லட்சம் சதுர அடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ரூ.114 கோடி மதிப்பீட்டில் மதுரை-நத்தம் ரோட்டில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.61 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில், கலைஞர் நினைவு நூலகம் கட்ட தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, கடந்த 2ம் தேதி கட்டுமான பணி துவங்கி, நடந்து வருகிறது.

சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான முறையில் மதுரையில் இந்த நூலகம் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக தரையை சமதளப்படுத்துதல் மற்றும் கான்கிரீட் உருளை அமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன. பணிகளை துரிதப்படுத்தி ஓராண்டிற்குள் கட்டி முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை பொதுப்பணித்துறையின் கட்டிடம் மற்றும் பராமரிப்பு பிரிவு பொறியாளர்களை கொண்ட கண்காணிப்புக்குழுவினர் மேற்பார்வையில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நடந்து வருகின்றன.

நூலகத்தின் தரைத்தளம் 3,400 சதுரமீட்டரில் அமைய உள்ளது. இதில், வரவேற்பு பிரிவு, உறுப்பினர்கள் சேர்க்கை அறை, அஞ்சல் பிரிவு, நூல் இரவல் வழங்கும் மற்றும் பெறும் பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அறை, வலைதள கட்டுப்பாட்டு அறை, உணவருந்தும் அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன. அடித்தளத்தில் 2,300 சதுரமீட்டரில் வாகன நிறுத்துமிடம் அமைகிறது. முதல் தளத்தில் (3,110 ச.மீ) கலைஞர் பிரிவு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலக பிரிவு அமைக்கப்படும்.

2ம் தளத்தில் (3,110 ச.மீ) தமிழ் நூல்கள் பிரிவும், 3ம் தளத்தில் (2,810 ச.மீ) ஆங்கில நூல்கள் பிரிவும் அமைக்கப்படும். 4ம் தளத்தில் (1,990 ச.மீ) ஆங்கில நூல்கள் பிரிவும், 5ம் தளத்தில் (1,990 ச.மீ) மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு மற்றும் போட்டித்தேர்வு நூல்கள் பிரிவும் அமைக்கப்படவுள்ளன. 6ம் தளத்தில் (1,990 ச.மீ) நூல் பகுப்பாய்வு, நூற்பட்டி தயாரித்தல் பிரிவு, கூட்ட அரங்கு, நூலக ஸ்டுடியோ, நூல் பாதுகாப்பு பிரிவு, மின்னணுருவாக்கப் பிரிவு, நுண்படச்சுருள், நுண்பட நூலக நிர்வாக பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

Related Stories: