ஒன்றிய அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு தடையாக இருக்காது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: பேரிடர் கால நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை, மற்றபடி ஒன்றிய அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு தடையாக இருக்காது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை, வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று காலை பாலாலய பூஜை தொடங்கியது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 675 கோயில்களில் திருப்பணிக்கு உத்தரவிடப்பட்டு, அதுகுறித்த விவரங்கள் இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி வடபழனி முருகன் கோயில் 100 ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் இக்கோயிலுக்கு வந்த நன்கொடைகளை கொண்டு 90% பணிகள் முடிவுற்று உள்ளது. வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10-11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் விதித்த பின் அதனை பின்பற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகம் எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்று பக்தர்கள் உடல்நிலையும் முக்கியம். வார இறுதி நாட்களில் கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் அறிவிப்பார்.

தற்போது நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கோயில்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து கோயில்களிலும் இதனை நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக அண்ணாமலையின் விமர்சனத்தை பொறுத்தவரை, அவர் ஒரு கட்சி தலைவராக இருக்கிறார், அதனால் ஏதாவது சொல்ல வேண்டுமே என்று பேசி வருகிறார்.

ஒன்றிய அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு தடையாக இருக்காது, மாநில வளர்ச்சிக்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்டால் அதை அவர்கள் செய்ய வேண்டும். ஆனால் பேரிடர் கால நிதி சரியாக ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை என்பதால் விமர்சனம் வைத்தேன். மேலும் கோவை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடைபெற்ற விவகாரத்தில், யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

Related Stories: