நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம் கோலாகலம்: 13ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம்

நாகை: நாகூர் தர்காவில் 465வது கந்தூரி விழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13ம்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. நாகை மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு, தினமும் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு 465வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாகை ஜமாத்தில் இருந்து நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட கப்பல் பல்லக்கு, செட்டி பல்லக்கு, சாம்பிராணி பல்லக்கு உள்ளிட்ட 5 பல்லக்குகளில் மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி மாலை 4 மணியளவில் நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூர் அலங்கார வாசலை வந்தடைந்தது. இதை தொடர்ந்து பல்லக்குகளில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டது.

தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சிறப்பு துவா ஓதிய பின்னர், 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் வரும் 13ம் தேதி இரவு நடைபெறுகிறது. 14ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சன்னதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 15ம் தேதி கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 17ம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை எஸ்பி ஜவஹர் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: