3 ஆண்டாக வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காததால் குழந்தைகளுடன் பெண் தர்ணா-பொன்னையில் பரபரப்பு

பொன்னை :  வீட்டுக்கு 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து பெண், தனது குழந்தைகளுடன் மின்வாரிய அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், பாலேகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா(33). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிதாகவீடு கட்டியுள்ளனர். தங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கும்படி பொன்னை மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் இதுவரை வழங்கவில்லையாம்.

இதையடுத்து அவர் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் கடந்த மாதம் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் லதா புகார் அளித்தார். அப்போது கலெக்டர் உடனடியாக மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த லதா நேற்று காலை தனது மகன், மகளுடன் மின்வாரிய அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய்யுடன் வந்து புகார் அளிக்க முயன்றார். ஆனால் இம்மனுவை ஏற்க துணை பொறியாளர் மறுத்துவிட்டாராம். இதனை கண்டித்து இரு குழந்தைகளுடன் லதா தர்ணாவில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories: