நெல்லை எம்கேபி நகரில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்: பொதுமக்கள் அச்சம்

நெல்லை: பாளை மனக்காவலம்பிள்ளை நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகள் இன்றி குடியிருப்புவாசிகள் திண்டாடி வருகின்றனர். பாளை மனக்காவலம்பிள்ளை நகர் அருகே அம்பேத்கர் நகரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட 366 குடியிருப்புகள் உள்ளன. பாளை தூய்மை பணியாளர் காலனி என்று அழைக்கப்படும் இக்குடியிருப்புகள் அனைத்தும் தூய்மை பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த 1993-94ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்குடியிருப்புகளுக்கு, பெரும் போராட்டத்தற்கு பின்னர் 96ம் ஆண்டில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. மொத்தம் 14 கட்டிடங்களில் 366 குடியிருப்புகளும் இயங்கி வருகின்றன. 196 சதுர அடியில் ஒரு குடும்பத்தினர் வசிக்கும் வகையில் இக்குடியிருப்பு உருவாக்கப்பட்டது. குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு 27 ஆண்டுகள் கடந்த நிலையில், பராமரிப்பு பெயரவுக்கே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி கட்டிடங்கள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன.

குடியிருப்புகளின் தள ஓடுகளை மாற்றாத காரணத்தால், வீடுகள் அனைத்தும் மழைக்காலங்களில் ஒழுகுகின்றன. 2வது தளத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் மழைக்காலத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளனர். மற்ற வீடுகளிலும் தரையில் அடிக்கடி நீருற்று பொங்குகிறது. குடியிருப்புகளின் மேல்தளத்தில், பக்கவாட்டு சுவர்களிலும் செடிகள், அரச மரம், பூவரசு மரம் என பல மரங்கள் வளர்ந்து வருகின்றன. இவற்றை அகற்றி, கட்டிடங்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால் சுவர் பழுதாகி காட்சியளிப்பதோடு, எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. இதுகுறித்து ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், ‘‘பாளை அம்பேத்நகரில் காணப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இன்மை காரணமாக சிதிலமடைந்து காணப்படுகின்றன. பல குடியிருப்புகள் இடிந்து விழும் அபாய சூழலில் உள்ளன. கழிப்பறைகள் அடிக்கடி அடைத்து கொள்கின்றன. குடியிருப்புவாசிகள் அச்சத்தோடு வீடுகளில் வசிக்க வேண்டியதுள்ளது.

இப்போதுள்ள அடுக்குமாடி குடியிருப்பை அகற்றிவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்பை கட்டி தருவதாக குடிசை மாற்று வாரியம் தெரிவித்து வருகிறது. அது வரவேற்புக்குரியது என்றாலும், தொடர்ந்து நாங்கள் நிலமற்றவர்களாகவும், சொந்தவீடு இல்லாத சூழலிலும் வசித்து வருகிறோம். நகர்புறத்தை தூய்மை செய்யும் பணியில் இருப்பதால் வெளியிடங்களுக்கும் நாங்கள் செல்ல முடிவதில்லை. எனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு 2 சென்ட் வீதம் நிலம் ஒதுக்கி, வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

Related Stories: