நெமிலி தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் அதிகாலை முதல் பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்-கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

நெமிலி :  நெமிலி தாலுகா அலுவலகத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் அதிகாலை முதல் பொதுமக்கள் காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது. எனவே கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.அரசு மற்றும் தனியார் துறைகளில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் கட்டமாயக்கப்பட்டுள்ளது. இதனால் 5 வயது குழந்தை முதல் ஆதார் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பெயர், முகவரி, செல்போன் எண்கள் திருத்தம் மேற்கொள்ளவும் தினமும் ஆதார் மையங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவில 67 கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள், குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கவும், ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளவும் தினமும் நெமிலி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு வருகின்றனர். இந்த மையத்தில் ஒரு நாளைக்கு 30 பேருக்கு மட்டுமே ஆதார் எடுக்கப்படுகிறது. இந்த மையத்திற்கு தனியாக ஆட்கள் நியமிக்கவில்லை. இங்கு ஒரே ஒருவர் மட்டுமே பணிபுரிகிறார். அவர் தினமும் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில்  இருந்து பெயரளவுக்கு மட்டுமே வந்து செல்கிறார்.

தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி, ஒருநாளைக்கு 30 பேருக்கு மட்டுமே ஆதார் எடுக்கும் சூழலில் 100க்கும் மேற்பட்டோர் அதிகாலை முதல் வந்து குழந்தைகளுடன் காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதன்படி நேற்றும் அதிகாலை முதல் பொதுமக்கள் வந்து குழந்தைகளுடன் பனி மற்றும் குளிரில் காத்துக்கிடந்தனர். இங்கு ஆதார் மையம் அமைக்க தனி கட்டிடம் இல்லாததால் தாசில்தாரின் வாகனம் நிறுத்தம் இடத்தில்தான் ஆதார் புகைப்படம் எடுக்கப்படுகிறது. இதனால் பல நேரங்களில் வெயில், மழையில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அதேபோல் தற்போது நெமிலி தபால் நிலையத்திலும் ஆதார் புகைப்படம் எடுத்தல், திருத்தம் பணி மேற்கொள்வதால் அங்கும் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர்.

ஆனால் கணினி கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கும் புகைப்படம் எடுக்க தாமதமாகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கிராமப்புற பகுதிகளில் தற்காலிக சிறப்பு முகாம் அமைத்து ஆதார் புகைப்படம் எடுக்கவேண்டும், நெமிலி தாலுகா அலுவலகம் மற்றும் தபால் அலுவலகத்தில் கூடுதல் ஆதார் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: