தேன்கனிகோட்டை அருகே சாலையை கடந்து சென்ற 20 யானைகள்-கிராம மக்கள் பீதி

தேன்கனிக்கோட்டை : தேன்கனிகோட்டை அருகே ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள், சாலையை கடந்து சென்றதால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர். இதையடுத்து, அந்த யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 70க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி வனப்பகுதிக்குள் புகுந்தது. இந்த யானைகள் தளி மற்றும் ஜவளகிரி, தேன்கனிகோடை, ஓசூர் உள்ளிட்ட வனப்பகுதிக்கு மாறி மாறி சென்று முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது.

இந்த யானைகளை மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளை கடந்த சில நாட்களாகவே வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், மரகட்டா வனப்பகுதியில் முகாமிட்ட 20க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று மாலை ஊருக்குள் வந்து சாலையை கடந்தன. அதனைக்கண்டு அப்பகுதி மக்கள் பீதிக்குள்ளாகினர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், யானைகள் கண்டதும் வண்டியை ரிட்டர்ன் அடித்து அங்கிருந்து பறந்து சென்றனர்.

ஆனாலும், ஒருசிலர் தங்களது செல்போன்களில் யானைகளை படம் பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது, அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சாலையை கடந்து சென்று யானைகள் சற்று நேரம் அங்கேயே முகாமிட்டிருந்தன. இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினர் விரைந்து சென்று, அங்கிருந்து தாவரக்கரை வனப்பகுதியாக ஜவளகிரி வனப்பகுதிக்குள் யானை கூட்டத்தை விரட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: