இருவேறு விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ₹5.21 லட்சம் இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி-திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை :  இருவேறு விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ₹5.21 லட்சம் இழப்பீடு வழங்காததால், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்கள் கோர்ட் உத்தரவுப்படி நேற்று ஜப்தி செய்யப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சின்னகாலூர் கிராமத்ைத சேர்ந்தவர் பாரதி மகன் பூங்காவனம்(31). இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பூங்காவனம் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, உரிய இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை  விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ₹4.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.  ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு தொகை வழங்காததால் பூங்காவனம் மேல்முறையிடு செய்தார். அதனை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே வழங்க உத்தரவிட்ட தொகையுடன், வட்டியும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்காததால், கோர்ட் ஊழியர்கள் நேற்று திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  திருப்பத்தூர் மார்கமாக செல்லும் அரசு பஸ்சை ஜப்தி செய்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாஜலம்(43) என்பவர், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் சோனாகுட்டை பகுதியில் இருந்து சாத்தனூர் செல்லும் அரசு பஸ்சில் சென்றுள்ளார். சாத்தனூர் அருகே வந்தபோது பஸ் விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடாஜலம் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட வெங்கடாஜலம் இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையாக ₹69 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு வழங்காததால், இதுகுறித்து வெங்கடாஜலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகை மற்றும் இதுநாள் வரை வட்டியுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு ₹1.11 லட்சம் வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், உரிய இழப்பீடு தொகை வழங்காததால் நேற்று கோர்ட் ஊழியர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி செல்லும் அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் அடுத்தடுத்து ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: