சாமியார்கள் பேச்சு ஆபத்தை விளைவிக்கும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 76 மூத்த வக்கீல்கள் பரபரப்பு கடிதம்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இந்து சாமியார்கள் பேசியது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு 76 மூத்த வழக்கறிஞர் பரபரப்பு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 17ம் தேதி முதல் 19 வரை இந்து சாமியார்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சாமியார்கள் சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக நீதித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு, உச்ச நீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். இதில் மூத்த வழக்கறிஞர்களான துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன், விருந்தா குரோவர் மற்றும் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ள அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது, ‘ஹரித்வார் மற்றும் டெல்லியில் நடந்த நிகழ்வுகள் மற்றும் அங்கு வைக்கப்பட்ட கருத்துகள் வெறும் வெறுப்புப் பேச்சுகள் மட்டும் கிடையாது. ஒரு சமூகத்தையே கொலை செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான அழைப்புக்கு சமமாகும். இந்த கருத்துகள் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.  

இது தொடர்பாக ஒருசிலர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, இது போன்ற நிகழ்வுகளை தடுக்க நீதித்துறையின் அவசர தலையீடு தேவை. அரசின் நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்து இந்த கடிதத்தை எழுதுகிறோம்’ என தெரித்துள்ளனர்.

Related Stories: