சபரிமலை கோயிலில் நாளை மண்டல பூஜை நிறைவு: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து இன்று சிறப்பு பிரார்த்தனை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை நிறைவடைவதை ஒட்டி இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. மண்டல பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாளுடன் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக தங்க அங்கி கடந்த 22ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.

தங்க அங்கி இன்று பிற்பகல் பம்பை கணபதி கோயில் வந்தடையும். பின்னர் அங்கிருந்து மேளம் தாளம் முழங்க பக்தர்கள் தலைசுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்கிறார்கள். தொடர்ந்து 18ம் படி வழியாக தங்க அங்கி கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. மண்டல பூஜை நாளை நிறைவடைவதை ஒட்டி சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே எரிமேலியில் நடைபெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் மேளதாளம் முழங்க ஆடி, பாடி வழிபட்டனர்.

ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழக்கமான பூஜைகளுடன் மண்டல பூஜை நாளை நிறைவடைவதுடன் கோயில் நடை அடைக்கப்படுகிறது. மகரவிளக்கை ஒட்டி ஐய்யப்பன் கோயில் நடை மீண்டும் வருகிற 30ம் தேதி திறக்கப்படவுள்ளது. 31ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மகர ஜோதி பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் அடுத்த மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ளது.

Related Stories: