நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு பூட்டு: டெல்லியில் பரபரப்பு

* காங். மாணவர் பிரிவு போராட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமையின் தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் மாணவர் பிரிவினர் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, அலுவலகத்துக்கு மாணவர்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் வௌி மாநிலங்களில் உள்ள 14 நகரங்கள் உள்பட 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 மையங்களில் 24 லட்சம் பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வழக்கம் போல் ஜூன் 14ம் தேதி வௌியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது மக்களவை தேர்தல் முடிவுகள் வௌியான ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவுகளும் வௌியாகின.

இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மையத்தில் தேர்வெழுதிய 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது போன்ற விவகாரங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்கில், “நீட் தேர்வை நடத்துவதில் 0.001 சதவீதம் அளவுக்கு கூட அலட்சியம் இருக்க கூடாது. இந்த தேர்வில் சிறு தவறு நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை என முதலில் மறுப்பு தெரிவித்து வந்த ஒன்றிய அரசு, பின்னர் சில இடங்களில் தவறுகள் நடந்ததாக ஒப்பு கொண்டது. இந்த விவகாரத்தில் பீகாரில் 13 பேர், குஜராத்தில் 5 பேர் என மாநில காவல்துறைகளால் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே எதிர்க்கட்சிகளின் தொடர் கண்டனங்களுக்கு பணிந்த ஒன்றிய அரசு தேசிய தேர்வு முகமைகளின் தலைவர் சுபோத் சிங்கை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்தி வரும் சிபிஐ 2 பேரை கைது செய்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தேசிய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். “முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய தேர்வு முகமையை மூட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

டெல்லி ஒக்லா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேசிய தேர்வு முகமை தலைமை அலுவலகத்தை தேசிய மாணவர் சங்க தலைவர் வருண் சவுத்ரி தலைமையில் போராட்டக் குழுவினர் நேற்று முற்றுகையிட்டனர். அலுவலகத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் மாணவர் பிரிவினர் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து கோஷமிட்டனர். முறைகேடு செய்த என்டிஏவை மூடு, என்டிஏவை தடை செய் என்றும் முழக்கம் எழுப்பினர். இதனால், அலுவலகத்தில் இருந்த என்டிஏ அதிகாரிகள் உட்புறமாக தாழிட்டுக் கொண்டனர். தொடர்ந்து கோஷமிட்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் அலுவலகத்தின் கதவை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர். அந்த கதவில் என்டிஏவை மூடு என்று எழுதப்பட்ட நோட்டீசை ஒட்டினர். தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘நாடு முழுவதும் தேர்வு முகமையின் அலுவலகங்களுக்கு பூட்டு போடுவோம்’
தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் வருண் சவுத்ரி கூறுகையில், ‘‘தேசிய தேர்வு முகமையின் திறமையின்மை மற்றும் அலட்சியத்தால் நாடு முழுவதும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதும், கேள்விததாள் கசிவுகளும் நிர்வாகத் தோல்விகள் மட்டுமல்ல. இது நமது இளைஞர்களின் எதிர்காலத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். என்டிஏவைத் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். மேலும் நம்பகமான, வெளிப்படையான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.என்டிஏவை தடை செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாடு முழுவதும் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகங்களுக்கு பூட்டு போடுவோம்,” என்றார்.

The post நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு பூட்டு: டெல்லியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: