ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசுக்கு கடும் ஏமாற்றம்

புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த நிலையில் ஒன்றிய அரசுக்கு கடும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. தொலை தொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை (ஸ்பெக்ட்ரம்) தொலை தொடர்பு துறை ஏலம் விட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.96 ஆயிரம் கோடி மதிப்பிலான 10,500 மெகா ஹெர்ட்ஸ் அலைபேசி சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஏலம் தொடங்கிய முதல் நாளில் மந்தமாக இருந்த நிலையில், 2வது நாளான நேற்றும் எந்த நிறுவனமும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

அதனால் காலை 11.30 மணியுடன் ஏலம் நிறைவடைந்தது. இதன் காரணமாக அரசு நிர்ணயித்த அடிப்படை விலையான ரூ.96,238 கோடியில் ரூ.11,340 கோடிக்கு (12 சதவீதம்) மட்டுமே விற்பனையானது. ஒன்றிய அரசு நடத்திய இந்த ஏலத்தில் 800 மெகாஹர்ட்ஸ் முதல் 26 ஜிகாஹர்ட்ஸ் வரை மொத்தம் 8 அலைவரிசைகளில் உள்ள 10,522.35 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டன. இந்த அலைக்கற்றை அலைவரிசைகளின் அடிப்படை விலை ரூ.96,317 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஏலத்தில் மொத்தமாக 141.4 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றைகள் ரூ.11,340 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இது அரசு நிர்ணயித்த அடிப்படை விலையில் 12 சதவீதத்துக்கும் குறைவாகும்.

பார்த்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.6,856.76 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகள் ஏலத்தில் வாங்கி முதலிடத்தில் உள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.3,510.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜியோ நிறுவனம் ரூ.973.62 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுத்து 3ம் இடத்தில் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 7 நாள்கள் ஏலத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை விற்பனையானது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் சுமார் 88 ஆயிரம் கோடியுடன் ஏலத்தில் முதலிடம் பிடித்தது. பார்தி ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.18,799 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தன.

The post ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசுக்கு கடும் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: