லஞ்ச ஒழிப்பு போலீசை கண்டதும் பணத்தை வீசி எறிந்த ஊழியர்கள் ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஆபீசில் ரெய்டு: கணக்கில் வராத ரூ.51 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 3வது மாடியில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் உதவி செயற்பொறியாளர்களாக நாகராஜன், லீலாவதி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களது கட்டுப்பாட்டில் ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் 15 பேரூராட்சிகள் உள்ளன. இதனிடையே ஒப்பந்ததாரர்கள் மற்றும் செயல் அலுவலர்களிடம் இருந்து கடந்த 2 நாட்களாக இங்கு லஞ்சம் வசூலிக்கப்படுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றி அவர்கள் கண்காணித்து வந்தனர்.

லஞ்ச பணம் வசூலிக்கப்படுவது நேற்று மாலை 3 மணிக்கு உறுதியானதையடுத்து டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகா உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்தனர். போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சிலர் பணக்கட்டுகளை அலுவலகத்திற்கு வெளியில் உள்ள வராண்டா பகுதியில் தூக்கி எறிந்தனர். அவைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அங்கு பணியாற்றிய 10க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அப்போது உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜ், லீலாவதி ஆகியோரிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அலுவலக மேஜைக்கு அடியிலும் பணக்கட்டுகள் கிடந்ததை போலீசார் கைப்பற்றினர். ஒவ்வொரு ஊழியரின் கைப்பைகள், பாக்கெட்டுகளில் சோதனை செய்தனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணிக்கு மேலும் நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.51.32 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புதுறை அதிகாரிகள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.51.32 லட்சம் கைப்பற்றப்பட்டது’’ என கூறப்பட்டுள்ளது. இது குறித்து உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜ், லீலாவதி மற்றும் 3 ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: