கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21-க்கு ஒத்திவைத்தது உதகை சார்பு நீதிமன்றம்..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21-க்கு உதகை சார்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்கக்கூடிய கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட இருவருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் 2017ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கக்கூடிய வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகினார். அதேபோல சிபிசிஐடி தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில், கோடநாடு பங்களாவில் சிபிசிஐடி தரப்பில் அமைக்கப்பட்டுள்ள பொதுப்பணித்துறை மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு சென்று விசாரணை நடத்தி ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இதையடுத்து வழக்கறிஞர் விஜயன் நிபுணர்குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் நகலை கேட்டுள்ளார். இந்நிலையில், அறிக்கையின் நகலை தர அரசு தரப்பு அவகாசம் கேட்ட நிலையில் வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராக 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரமேஷ், தேவன், ரவிக்குமார், அப்துல் காதர் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21-க்கு ஒத்திவைத்தது உதகை சார்பு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: