கொடைக்கானல் அருகே தீயில் கருகி உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே தீயில் கருகி உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து முடங்கியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த பாய்ச்சலூரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு சிறுமி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்து உயிரிழந்தார்.

போலீசார் ஒரு வாரமாக இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேத பரிசோதனை மூலமாக தெரியவந்துள்ளது. ஆனால் மாணவியின் மர்ம மரணத்திற்கு காரணம் என்ன என கண்டறிய முடியவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வத்தலகுண்டு சாலையில் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். முக்கிய சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதாக மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிறுமி மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாட்களில் கண்டறியப்படும் என கூறி கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: