அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!

சமவெளியில் மிளகு சாகுபடி செய்து தற்போது பல விவசாயிகள் தங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள். கோவை தொண்டாமுத்தூர் தீனம்பாளையத்தைச் சேர்ந்த திருமதி நாகரத்தினம் அவர்கள் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் ஒரு பெண் விவசாயியாக திகழ்கிறார். மிளகு சாகுபடி குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை.

நாங்க விவசாயக் குடும்பம்தான், என் மாமனார் ஒரு முழுநேர விவசாயி என்பதால் எனக்கு விவசாயம் பரிச்சயமாகவே இருந்தது. என் கணவர் ஒரு மருத்துவர் என்றாலும் எனது விவசாயப் பணிகளுக்கும் அவ்வப்போது உதவி செய்வார். எங்க தோட்டம் மொத்தம் 24 ஏக்கர், ஆரம்பத்தில் தென்னை மரங்களை மட்டுமே என் மாமனார் நட்டிருந்தார், நிலம் எங்களுக்கு வந்தபிறகு படிப்படியாக பழ மரங்களையும் தோட்டத்தில் அறிமுகப்படுத்தினோம்.

தோட்டத்தை பிரித்து கொய்யா, மா, சப்போட்டா மரங்களை நடவு செய்தோம். பழ மரங்களுக்கு நீர் செல்லும் வாய்க்கால் ஓரத்தில் தேக்கு மரங்களை நடவுசெய்தோம். பழமரங்கள் டிம்பர் மரங்கள் பராமரிப்பதுதான் எங்களுக்கு எளிதாக இருந்ததால் மரங்கள் மீதே அதிக கவனம் செலுத்தினோம். தேக்கு மரங்களைதான் அதிகமாக நட்டோம், நல்ல பாசனம் இருந்ததால் நன்கு வளர்ந்துள்ளது. ஏறக்குறைய 1200 தேக்கு மரங்கள் இருக்கு. பிறகு ஈஷாவில் இருந்து மகாகனி, குமிழ் மரங்களையும் வாங்கி நட்டுள்ளோம்.

ஆரம்பத்தில் மரங்களுக்கு இரசாயன உரம் பயன்படுத்தினாலும், படிப்படியா இயற்கைக்கு மாறிவிட்டோம். ஈஷா இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொண்டபின் முழுமையான இயற்கை விவசாயம் செய்ய கத்துக்கிட்டோம். எல்லா மரங்களுக்கும் ஜீவாமிர்தம் மட்டுமே கொடுக்கிறேன். அப்போது மிளகு நடலாம் என்று 200 கன்றுகளை நட்டோம், ஆனால் அதை சரியாக பராமரிக்கத் தெரியாமல் கன்றுகள் எல்லாம் இறந்துவிட்டது.

மிளகு சாகுபடி பயிற்சியில் பங்கேற்பு: அந்த காலகட்டதில்தான் ஈஷா விவசாய இயக்கம் ‘சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே’ என்ற பயிற்சியை கொடுத்தாங்க. அந்த பயிற்சியில் மிளகு சாகுபடி குறித்த எல்லா விவரங்களையும் கத்துக்கிட்டேன். பயிற்சியில் கலந்து கொண்ட நிறைய விவசாயிங்க மிளகு சாகுபடி செய்ய ஆரம்பிச்சாங்க, நானும் எனது தோட்டத்தில் மீண்டும் மிளகு கொடிகளை நடத்தொடங்கினேன்.

சமவெளியில் சாகுபடி செய்ய கரிமுண்டா, பன்னியூர் மிளகு ரகங்களே சிறந்தது. அந்த கன்றுகளையும் புதுக்கோட்டை விவசாயிகளிடம் வாங்கி வந்தேன். தோட்டத்தில் இருந்த தேக்கு மரங்களை விற்க நினைத்திருந்தோம், பயிற்சிக்கு பிறகு எல்லா தேக்கு மரத்திலும் மிளகு ஏற்றலாம் என திட்டத்தை மாற்றிக்கொண்டோம். எங்களோட நிலத்தின் மண் வளம், வடிகால் வசதி எல்லாம் மிளகு சாகுபடிக்கு சாதகமாகவே இருந்தது. மிளகு நட்டு ஏறக்குறைய 5 வருடங்கள் ஆயிடுச்சு, தற்போது ஓரளவு மிளகு விற்பனை செய்ய முடிகிறது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் நல்ல விளைச்சலை கொடுக்கும். மிளகு தரமாகவும் காரமாகவும் உள்ளதால் நல்ல விலைக்கே விற்கிறேன், 100 கிராம் மிளகை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். மக்களும் தரத்தைப் பார்த்தவுடன் கூடுதல் விலை கொடுக்க தயங்குவதில்லை.

நான் இப்போது வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். எங்கள் பண்ணையில் விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்கு “அமுது அங்காடி” என்ற சிறு கடையை வைத்துள்ளோம், மொத்த விற்பனையும் செய்கிறோம். பழங்கள் தென்னை மற்றும் மிளகு என மூன்று வகையில் வருமானம் தற்போது வருகிறது.

டிம்பர் மரம் வெட்டாமலேயே வருமானம் சாத்தியம்: சமவெளியில் மிளகு சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. மிளகு நன்றாக வருமானம் தருவதால் என்னோட தேக்கு மரத்தை வெட்ட வேண்டிய அவசியமே இல்லை. டிம்பர் மரத்தை வெட்டாமலேயே மர விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு மிளகு சாகுபடி ஒரு வாய்ப்பாக இருக்கு. நான் ஒரு மிளகு விவசாயியாக இருப்பதற்கு ஈஷா ஒரு முக்கியக் காரணம், அவர்களின் பயிற்சிகள் உதவியாக இருந்தது, அவர்களுக்கு எனது நன்றி.

ஈஷா காவேரி கூக்குரல் குழுவினர் மரப்பயி்ர் மற்றும் மிளகு சாகுபடி குறித்து பண்ணைக்கே வந்து ஆலோசனைகளும் வழங்குகிறார்கள். மரம் சார்ந்த விவசாயம் குறித்த கூடுதல் தகவல்களுக்கும், 3 ரூபாய்க்கு டிம்பர் மரக்கன்றுகளை பெறவும் ஈஷா காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

The post அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்! appeared first on Dinakaran.

Related Stories: