புதிதாக வரும் நவீன தொழில் நுட்பத்தால் புதுகையில் அழிந்து வரும் கல் உடைக்கும் தொழில்

*வாழ்வாதாரத்தை இழக்கும் தொழிலாளர்கள்

*ஓட்டல்களில் சர்வர் வேலை பார்க்கும் அவலம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் கல் உடைக்கும் தொழில் அழிந்து வருவதால் அதனை நம்பி இருந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இதனால் அவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், நார்தாமலை உள்ளிட்ட, கீரனூர் ஆகிய பகுதிகளில் கல் உடைக்கும் தொழில் செய்வோர் ஆயிரக்கணக்கில் இருந்தனர். இந்த பகுதியில் சிறிய சிறிய மலைகளில் அரலை, ஜல்லி, தகட்டு கல் உள்ளிட்ட கற்கள் உடைத்து எடுத்து பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்பட்டு வந்தது. முன்பு சாலை அமைக்கும்போது ஒன்றை ஜல்லி கற்கள் அதிகளவில் பயன்பட்டு வந்தது.

இதனால் அரசு ஒப்பந்தகாரர்கள் அனைவரும் அவர்களுக்கு சொந்தமாக சிறிய முதல் பெரிய அளவில் அவர்களின் வசதிக்கு ஏற்றார்போல் மலையடி நடத்தி வந்தனர். பின்னர் சாலை அமைப்பதில் சில மாற்றங்களை அரசு மேற்கொண்ட்டது. இதனால் ஒன்றை ஜல்லியின் தேவை குறைந்து விட்டது. இதேபோல் கிராமங்களில் வீடுகட்டுவோர்கள் அரலை, கடகால் போன்ற கற்கள் கொண்டு பேஸ்மட்டம் அமைப்பார்கள்.

தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வீடு கட்டுவோர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றார்போல் இரும்பு கம்பிகள் வாங்கி பெல்ட் அமைத்து கொள்கின்றனர். இதனால் அரலையின் தேவையும் குறைந்துவிட்டது. கிராமத்தில் ஒருசிலர் காம்பவுன்ட் சுவர்கட்ட அரலையை பயன்படுத்துகின்றனர். இதேபோல் தகட்டுகல் கொண்டு வேலி அமைக்க கம்பி கால் உடைத்து எடுக்கப்பட்டது.

தற்போது சிமென்ட் கொண்டு கம்பியால் தயாரிக்கும் பணி நடந்து வருவதால் அதன் தேவையும் குறைந்துவிட்டது. இதனால் கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத முதலாளிகள் தங்கள் தொழிலை நிறுத்தி விட்டனர். மேலும் சாலை பணிக்கு கிரசர் ஜல்லி பயன்படுத்துவதால் தொழிலாளர்களின் தேவையும் குறைந்துவிட்டது.

இப்படி பல்வேறு பிரச்னைகளால் கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்து உதவிதொகை அல்லது வேறு தொழில் கற்றுக்கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல் உடைக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அன்னவாசல், நார்த்தாமலை. இலுப்பூர், கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கல் உடைக்கும் தொழில் கொடிகட்டி பறந்தது. இந்த தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வந்தனர். கல் உடைக்கும் தொழில் தொடங்க ஆட்கள் இருந்தும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பல முதலாளிகள் தொழில் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. நாங்கள் கேட்ட சம்பளம் வழங்க முதலாளிகள் முன் வந்தனர். ஆனால் தொடர்ந்து அரசின் நடவடிக்கை மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டின் காரணமாக மெல்ல மெல்ல தொழில் நசுங்க தொடங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத நாங்கள் செய்வது அறியாது இருக்கிறோம். தற்போது முற்றிலும் நசிந்து விட்டது. தற்போது கிராமங்களில் மலையடிக்கும் பணிகள் எங்கும் நடப்பதில்லை. அவர்களுக்கும் வருமானம் குறைந்து விட்டது.

இதனால் அவர்கள் மெல்ல மெல்ல தொழிலில் இருந்து முதலாளிகள் வெளியேற தொடங்கி விட்டனர். அரசு சாலை அமைக்க கிரஷர் ஜல்லியை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து வீடுகட்ட அரலைக்கு பதில் பெல்ட் அமைப்பது வரை இந்த தொழில் அழிவுக்கு சென்றுவிட்டது. எங்களுக்கு படிப்பறிவு ஏதும் கிடையாது. மாற்று தொழில் ஏதும் செய்ய தெரியாது.
இருந்தாலும் குடும்பத்தை காப்பாற்ற பெரு நகரங்களுக்கு சென்று விடுதிகள், ஓட்டல்களில் பணியாற்றி வருகிறோம். அதில் இருந்து வருமானம் எங்களுக்கு பேதவில்லை. ஒரு சிலர் தங்கள் ஊரிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கல்உடைக்கும் தொழிலாளர்களுக்கு அரசு உதவிதொகை அல்லது மாற்று தொழில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

The post புதிதாக வரும் நவீன தொழில் நுட்பத்தால் புதுகையில் அழிந்து வரும் கல் உடைக்கும் தொழில் appeared first on Dinakaran.

Related Stories: