கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பகவதி அம்மாள் தீர்ப்பு அளித்தார். நிர்மலா தேவி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுவிடுத்துள்ளனர்.

முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவிகளை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் கைதாகினர். பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகினர். நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமியை குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் இருந்து வந்துள்ளார். நிர்மலா தேவி, கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர் கல்வித்துறையில் உள்ள முக்கிய நபர்களுக்கு பாலியல் ரீதியாக மாணவிகளைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார் என சில மாணவிகள், நிர்மலா தேவி பேசியதை ரெகார்ட் செய்து பெற்றோர் மூலம், கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவிகளிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின், போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர்.

பின்னர், 2018 ஏப்ரலில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்பு, மூவர் மீதும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இருதரப்பு வாதங்கள் மற்றும் விசாரணைகளும் நிறைவு பெற்றன.

இந்த வழக்கில் பலர் மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும் தான் குற்றவாளிகள் என இறுதி செய்து, குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகையில் 3 பேருக்கும் எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், கரோனா ஊரடங்கால் வழக்கு தொடர்பான விசாரணை தாமதமானது.

மேலும், இந்த வழக்கில் முந்தைய விசாரணையில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளிக்க இருந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. முருகன் மற்றும் கருப்பசாமி மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், 29ஆம் தேதி நிர்மலா தேவி உட்பட 3 பேரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இந்த நிலையில், இன்று 3 பெரும் ஆஜரானதால் இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி தீர்ப்பு அளித்துள்ளனர். நிர்மலா தேவி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் குற்றவாளி இல்லை என்று அவர்களை விடுவிடுத்துள்ளனர்.

நிர்மலாதேவிக்கு இன்று தண்டனை விவரத்தை அறிவிக்கக்கூடாது என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். தமது தரப்பில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூற ஒரு வாய்பளிக்குமாறு நிர்மலா தேவி வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். தீர்ப்பளித்த அன்றே தண்டனை விவரம் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை விவரம் அறிவிப்பது தொடர்பாக பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: