விராலிமலை அருகே தென்னலூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்த இளைஞர்கள்-பார்வையாளர்கள் திரண்டதால் பரபரப்பு

விராலிமலை : விராலிமலை அருகேயுள்ள தென்னலூர் முத்துமாரியம்மன் கோயிலில் வேண்டுதல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை முதன்முதலாக தென்னலூர் வாடிவாசலில் அடைத்த பிறகுதான் மற்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்துச் செல்லப்படும். இக்கோயிலில் வருடந்தோறும் தை மாதம் 29ம் தேதி அரசு அனுமதி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடத்தப்படும். இப்போட்டியை காண பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்

அங்கு கூடுவார்கள். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விசேஷ கோயில் இது என்பதால் வருடம் முழுவதும் விசேஷ நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் காளை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைகளை ஆட்டோ, வேன்களில் ஏற்றி இக்கோயிலுக்கு கொண்டு வந்து வழிபாடு நடத்தி வாடிவாசலில் காளையை அவிழ்த்து விடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த நிலையில் ஏற்கனவே அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திக்கொண்டிருந்தபோது போலீசார் சென்று போட்டியை தடுத்து நிறுத்தி காளை உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கோயிலின் முன்னால் இருக்கும் ஜல்லிக்கட்டு திடல், வாடிவாசல் உள்ளிட்ட இடங்களில் கட்டிவைக்கப்பட்டிருந்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்போவதாக தகவல் பரவத்தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து பார்வையாளர்கள் குவிய தொடங்கினர். அதனைத் தொடர்ந்து ஒருசிலர் வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிட முற்பட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஊர் முக்கியஸ்தர்கள், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் நிலைமையை எடுத்துக்கூறி அனுமதி இல்லாமல் இதுபோல் அவிழ்த்து விடக்கூடாது என்று வருவாய்த்துறை, போலீசாருக்கு கமிட்டியாளர்கள் உறுதியளித்துள்ளனர். எனவே காளைகளை அவிழ்த்து விட வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் கோயிலில் வழிபாடு மட்டும் நடத்திவிட்டு காளைகளை வேனில் ஏற்றிச் சென்றனர். ஜல்லிக்கட்டை பார்த்துவிடலாம் என்று பல்வேறு ஊர்களில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். போட்டி நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியில் நிலவியதால் அங்கு ஒருவித பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Stories: